கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் 2-வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தமிழக அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வணிகர்களுக்கு உதவி செய்து வருகிறது. மாநில கவர்னர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். இந்தியா மத சார்பற்ற நாடு. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதசார்புள்ள நாடுதான் என்று திணிப்பது போன்று கவர்னர்கள் பேசுவது தவறானது.
அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழக கவர்னர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்பது போல சொல்வதும் சரியானது இல்லை.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தோ புகார் தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை தமிழக கவர்னர் செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.