X

தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்க முயற்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம்.

பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித்தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையானது மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித்துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய இடத்திலும் இருக்கிறது.

வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம். இந்தியாவினுடைய மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது.

ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடித்து, உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணி வகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தொழில்நுட்ப ஜவுளி எனப்படும் ‘டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்’ என்பது வளர்ந்துவரும் மிக முக்கியமான ஒரு பிரிவு. இதற்கு, தமிழக அரசு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.

* விளையாட்டுத் துறையினருக்கான துணிகள்.

* நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள்.

* தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த துணிகள்.

* மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் துணிகள்

* ஆட்டோ மொபைல் துறையில் பயன்படுத்தப்படும் காற்றுப்பைகள்

* சீட் பெல்ட்கள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.

தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம். ரூபாய் 10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் “ஏற்றுமதி மையங்கள்” அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம். அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் நுட்ப ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், காந்தி, முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.