Tamilசெய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த. அமிர்த குமார், தலைமைச் செயலக பணியாளர் சங்க தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் அகில இந்திய தலைவர் கே. கணேசன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவி சு. தமிழ்ச்செல்வி, தமிழ் மாநில அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மு. செ. கணேசன், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணி தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெ.சரவணன், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க மாநிலத் தலைவர் எஸ் மதுரம், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜெய.துரை, தமிழ்நாடு உயர் கல்வி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் டாக்டர்.இரா. மணிகண்டன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சு.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

10 அம்சக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கொடுத்தும், அதன் மீது கடந்த சட்டமன்ற தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

எனவே அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுடைய பல லட்சம் வாக்குரிமை உள்ள குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.