தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிற மாநிலங்களில் தமிழ் பாடத்தை 3-வது மொழியாக அறிவிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் தி.மு.க.வினர் அதனை மாற்றி தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து மக்களிடம் பொய் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் மு.க.ஸ்டாலின் பித்தலாட்ட அரசியலை செய்து வருகிறார். அவர்கள் தமிழ் மொழிக்காக எதையும் செய்யவில்லை. தமிழை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை என்பது மாநில அரசின் கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. உடல் உறுப்பு தானத்தில் உலக நாடுகளுக்கு இணையாக தமிழகம் செயல்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக கடைசி வரை போராடிய மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் மட்டும் தான் இதற்காக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி வேறு வழியின்றி தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் நீட் வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான் நாங்கள் உள்ளோம். தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.