ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:- களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் இடம் பெற்றதற்காக மகிழ்கிறேன். தம்பி களஞ்சியம் இமையத்தின் எழுத்தை அப்படியே திரையில் வார்த்தெடுக்கிறார்.
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விழாவில் ஒரு நடிகர் பேசுகிறார். “திஸ் பிலிம்ல சாங்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு” என்று ஆங்கிலத்தில் பேசுகிறார். இவர்களை வைத்து என்னடா பண்றது.
நாக்குல கூட தமிழ் சரியா வரலயே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க. நமக்குள் இருக்கும் சாதி, மத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.