பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா மீனவரணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 69 பேருக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். மீனவரணி செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணனிடம் இந்தியை கட்டாயப்படுத்தும் அமித்ஷாவின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
அமித்ஷாவின் கருத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு இன்னொரு கருத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.
தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று இந்த நாட்டின் பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? அரபு, கிரேக்க மொழிகளைவிட பழமையானது என்ற வரலாற்று பதிவை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும். கொண்டாடி இருக்க வேண்டும்.
அது தமிழின் கொண்டாட்டம். தமிழர்களின் கொண்டாட்டம். அதை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்களே.
ஆளும் அ.தி.மு.க. அரசு பிரதமரின் அந்த கருத்தை வரவேற்று சட்டமன்றத்திலேயே நன்றி சொல்லி இருக்க வேண்டாமா?
தமிழ், தமிழர்கள் என்று மார்தட்டும் தி.மு.க. உள்பட அத்தனை அரசியல் கட்சிகளும் கொண்டாடி இருக்க வேண்டும். பிரதமருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை.
அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழர்கள் ஒப்பாரி வைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. சந்தோசப்பட கற்றுக்கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.