தமிழனுக்கும், தமிழுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது – கமல்ஹாசன் பேச்சு

சென்னை தங்கச்சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக பாதை விலகாமல், பதற்றம் இல்லாமல் மக்கள் நீதி மய்யம் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. 3-வது அணி வென்றதாக சரித்திரமே இல்லை என்று சொல்லி கொண்டு, ‘ப.சிதம்பரம் அண்டு சன்ஸ்’ செய்தி அனுப்புகிறார்கள் காங்கிரசில் வந்து சேருங்கள் என்று அழைக்கின்றனர். வெல்லாத கட்சியை எதற்காக அப்படி அழைக்கிறீர்கள்?

‘நாமே தீர்வு’ என்று நாங்கள் சொன்னால் ‘ஒன்றிணைவோம் வா’ என்று சத்தம் மாறாமல் சொல்கிறார். இல்லதரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து கோட்பாடை முதல் கட்சியாக நாங்கள் தான் அறிவித்தோம்.

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றோம். அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கிறார். இரண்டும் ஒன்று தானே. 7 உறுதி மொழிகள் உள்பட அத்தனையும் காப்பி அடிக்கிறார். அப்படியாவது ‘பாஸ்’ பண்ணவேண்டும் என்ற அவசரம் வந்துவிட்டது. டிஜிட்டல் தற்சார்பு திட்டம் என்று நாங்கள் சொல்லியதை ‘பிராட்பேண்ட்’ என்று காப்பியடிக்கிறார்கள்.

3-வது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். வதந்தி என்று அவர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நான் சொல்கிறேன். யார் வந்தாலும் 6 சீட்டு தான். இவர்களும் கொடுத்ததை வாங்கி கொண்டு ஆறு மனமே ஆறு என்று வந்துவிடுகிறார்கள்.

100 ஆண்டுகளான கட்சி, உட்கார்ந்து பேசலாம் வாங்க என்று கூறினால், அங்கு சென்று தவழுகிறார்கள். 101 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்று தவழந்து செல்கிறது. இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா? சரி போய்விட்டீர்கள். மீண்டும் வருவீர்கள். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக என்று கூறியவர்கள், 6-தொகுதிக்காக ஆறுகளை ஆறாக்கியவர்களுடன் இருக்கிறார்கள். தமிழனுக்கும், தமிழுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதநம்பிக்கையை விடவும் தன்னம்பிக்கை முக்கியமானது. தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சர் ஆகினால் கூட அது வெற்றி இல்லை. நாங்கள் வைத்த இலக்கை அடையும்போதுதான் அது வெற்றி.

என் வயது இருக்கும்போது, என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் நேர்மை அவர்களிடம் கிடையாது. நேர்மைதான் என்னுடைய ஆயுதம். என்னிடம் இருந்து மு.க.ஸ்டாலின் ‘காப்பி’ அடிக்கிறார். அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால், தமிழகம் பிழைத்திருக்கும். அரசியலுக்கு வந்ததும், விலகியதும் சம்பாதிப்பதற்காகத்தான். வியாபாரிகளிடம் இருந்து மீட்டெடுக்க என்னை கருவியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தி.மு.க., அ.தி.மு.க.வை கை கழுவவேண்டும். 2 கட்சிகளும் ஊழலின் கூட்டுறவு பண்ணை.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools