Tamilசெய்திகள்

தமிழக முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு – மத்திய அமைச்சர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னப்பூர்ணாதேவி நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது மத்திய மந்திரி அன்னப்பூர்ணாதேவி பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் 226 பள்ளிகளில் தனித்திறன் மேம்பாட்டு மையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போஷான் அபியான் திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் ஆண்டில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு அதிக அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, தமிழகம் முழுவதும் இதுபோன்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.