Tamilசெய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகை சூழ்ந்துகொண்டு அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயமும், 5 மீனவர்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை நாட்டினர் எடுத்துச் சென்றுவிட்டனர். காயமடைந்துள்ள மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், இலங்கை நாட்டினரால் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவும், தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.