X

தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுமா? – அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்று தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்று தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் பி.உமாநாத் கூறியதாவது:-

தமிழகத்தில் 7 முக்கிய கம்பெனிகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்றன. இவற்றில் 3 உற்பத்தியாளர்கள், அரசுக்கு சப்ளை செய்கிறார்கள். இது அரசு துறையில் உள்ள 90 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. சிறிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மீண்டும் நிரப்பிக்கொள்ளும் சிலிண்டர்கள் மூலமாக டீலர்கள் ஆக்சிஜன் சப்ளை செய்கிறார்கள்.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி 57 ஆயிரத்து 968 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சுமார் இரண்டு, மூன்று நாட்கள் ஆக்சிஜன் தேவைப்பாடு 280 மெட்ரிக் டன் ஆக உயர்ந்தது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 46 ஆயிரம் பேருக்கு 180 மெட்ரிக் டன் தேவைப்பட்டது. தற்போதைய அலையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தாலும், ஆக்சிஜன் தேவைப்பாடு சுமார் 500 மெட்ரிக் டன் ஆக இருக்கும்.

27 ஆயிரத்து 299 சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 771 தீவிர சிகிச்சை பிரிவு வார்டு படுக்கைகளில் நோயாளிகள் இருந்தால் கூட, நமக்கு 900 மெட்ரிக் டன்னுக்கு மேல் ஆக்சிஜன் தேவைப்படாது. ஆனால் நம்மிடம் அதைவிட அதிகமாக சேமித்து வைக்கும் வசதி உள்ளது. அதையும் தாண்டி தேவைப்பட்டால், தொழிற்துறைக்கு வழங்கும் சப்ளையை நிறுத்தி விடுவோம். ஆஸ்பத்திரிகளுக்கு அரசு வாங்கும் ஆக்சிஜன் விலை உயரவில்லை. ஆக்சிஜன் ஒரு கன மீட்டர் வாங்குவதற்கு, அரசு சுமார் ரூ.15.50 முதல் ரூ.20 வரை செலுத்துகிறது. இதில் எரிபொருள் விலை உயர்வால் உயர்த்தப்பட்ட போக்குவரத்து செலவும் அடங்கும். தனியார் ஆஸ்பத்திரிகள் இதையும் விட கொஞ்சம் அதிகமான கட்டணம் கொடுத்து வாங்குகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.