திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் மொழியை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியின் பெருமைகளை பிரதமர் நரேந்திர மோடி உலகுக்கே பறைசாற்றுவதால் அவருக்கு நன்றி கூறுகிறோம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தற்போதும் பா.ஜனதா அ.தி.மு.க.வின் கூட்டணியில்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து உரிய அறிவிப்பு வரும். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. தற்போது அயோத்தி பிரச்சினை சுமுகமாக முடிந்துள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டமும் விரைவில் சுமுகமாக கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுகிறது.
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு இல்லை. அங்கு கூட்டணி கட்சிதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பா.ஜனதா மாநில தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.