தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் யார்?

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பின்னர் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது. இதனால் தமிழக பா.ஜ.க. தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்பதில் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகிறது.

இந்தநிலையில் பா.ஜ.க. தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சிவபிரகா‌‌ஷ், தேசிய செய்தித்தொடர்பாளர் நரசிம்மராவ் எம்.பி. ஆகியோர் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, சிறுபான்மை அணி, ஆதிதிராவிடர் அணி, பழங்குடியினர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும், சிவபிரகா‌‌ஷ், நரசிம்மராவ் ஆகியோர் தனித்தனியாக கருத்து கேட்டார்கள்.

அப்போது தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்துவதற்கு என்னென்ன திட்டம் இருக்கிறது?, தமிழக பா.ஜ.க தலைவராக யாரை நியமிக்கலாம்?, தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். தமிழக பா.ஜ.க. தலைவராக யாரை நியமிக்கலாம்? என்ற கேள்விக்கு சிலர் ஒரு நிர்வாகியின் பெயரையும், சிலர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப 2 நிர்வாகிகளின் பெயர்களையும் அவர்களிடம் கூறினார்கள். இதையடுத்து தலைவராக நியமிக்க பரிந்துரைத்தவர்களிடம் அதற்கான காரணத்தையும் இருவரும் கேட்டனர். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க. தலைவராக தேர்ந்தெடுக்க 11 பேர் கொண்ட பட்டியலையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.

அந்த பட்டியலும் தேசிய தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிரு‌‌ஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், குப்புராம், மதுரை சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இடம் பெற்ற நபர்கள் அல்லது தேசிய தலைவர் அமித் ‌ஷா தேர்ந்தெடுக்கப்படும் நபர் தமிழக பா.ஜ.க. தலைவராக வாய்ப்பு உள்ளது. பட்டியலில் இடம் பெற்ற 11 பேரின் திறமை, செயல்பாடுகள் குறித்த தகவல் உளவுத்துறையின் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சூழ்நிலையும் இருக்கிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news