தமிழக பா.ஜ.க தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி ஆலோசனை நடத்துவதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறார். “என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி” என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட இருக்கிறார். மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 1,000 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதற்காக, அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளில் தனித்தனியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபமும், கோவை தொகுதியில், சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கத்திலும், சேலம் தொகுதியில், அம்மாபேட்டை சிவாஜி நகரில் உள்ள வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியிலும், நாமக்கல் தொகுதியில், பொம்மக்குட்டை மேடு கவின் மஹாலிலும், நீலகிரி தொகுதியில், ஊட்டி எங்படுகா அசோசியேஷன் ஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 2 பேர் வீதம் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மோடி கட்-அவுட் அருகே நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேச்சை, தமிழ் மொழியிலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முழுவீச்சில் தயாராகி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்து விட்டோம். 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.