தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கும் கொரோனா பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கும் கொரோனா எளிதில் ஒட்டிக்கொள்கிறது. அதனால் தான் மீண்டும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்தணி கோவில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், டி.ஆர்.ஓ. அசோகன், சப்-கலெக்டர் மகாபாரதி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சா.மு.நாசருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அமைச்சர் சா.மு.நாசர் அடையாறில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார். தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை டுவிட்டர் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.