தமிழக பட்ஜெட் – பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு
தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:-
2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். உற்பத்தி சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர்-பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை செய்யப்படுகிறது.
அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும். நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.