தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.
நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும் போது, எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலை எல்லோரும் பார்க்கும் வகையிலும் சட்டசபையில் பெரிய திரையில் ஒளிபரப்ப கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர், பிற்பகல் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்கிறது.
இதேபோல் தமிழக சட்டசபையில் நாளை (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார்.
இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.