Tamilசெய்திகள்

தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது 3 நாட்கள் நடைபெற்ற கூட்டம் 13-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆலோசனைக் கூட்டமும் நடந்து வந்தது. இந்த ஆலோசனைகள் முடிக்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் நிதித்துறை ஈடுபட்டு வருகிறது. அடுத்தமாதம் முதல் வாரத்திற்குள் இந்த பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும். அனேகமாக மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவை கூடும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் 2-வது வாரத்தில் சட்டசபை கூடும். அந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் தொடங்கும் என தெரிகிறது. எனவே மார்ச் மாதம் தொடங்கும் சட்டசபை கூட்டம் ஏப்ரல் மாதம் முடிய சுமார் 30 நாட்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.