ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2020-ம் ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி முடித்ததும் முதல் நாள் கூட்டம் நிறைவு பெற்றது.
இதையடுத்து, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது?, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
பின்னர், அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சட்டமன்ற கூட்டத் தொடரை வரும் 9-ம் தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.