தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் கூடியது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும், தற்போதைய சட்டசபையின் உறுப்பினர்களான கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. காலை 10 மணிக்கு சபை கூடியதும், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. இதில், தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அடிப்படையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப இருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.

இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசுகிறார்கள். தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news