Tamilசெய்திகள்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது – முதல் முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் வார்த்தைகளாக ஓடும். அதுதவிர டேப்லெட் என்ற கருவியும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றிலும் பட்ஜெட் தொகுப்பை காணலாம்.

கொரோனா தொற்று நீடித்து வருவதால், சென்னை கலைவாணர் அரங்கத்தின் 3-வது மாடியில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறுகிறது. அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறுகின்றன.

சமீபத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முந்தைய அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கடந்த ஆட்சியைப் பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தார்.அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சட்டசபையில் கடும் விவாதங்கள் வெடிக்கலாம். வெளிநடப்பு, வெளியேற்றம் என பல நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே இந்த கூட்டத் தொடர் முழுவதும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு எப்போதும் சட்டசபை சூடாகவும், பரபரப்புடனும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.