X

தமிழக சட்டசபையில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யபப்டுகிறது

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

இதற்காக பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் 1½ மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.

அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், பட்ஜெட் அறிவிப்பின் நிறைவாக வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரியல்லாத வருவாய், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய தகவல்களையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட இருக்கிறார்.

தமிழக பட்ஜெட் ‘7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் அளிப்பார். நாளை 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 4-வது முறையாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். வேளாண் பட்ஜெட்டிலும் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதனையடுத்து 21-ந் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளை சட்டசபை கூட்டம் நடக்கிறது. அதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில்பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, 22-ந் தேதி (வியாழக்கிழமை) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடையும்.

அடுத்து பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

Tags: tamil news