தமிழக சட்டசபையில் இன்று இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் அதில் இடம் பெற்றிருக்கும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 2 மணி நேரம் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார். அதன்பிறகு சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடையும்.
இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.