தமிழ்நாட்டில் மிகப்பெரிய நாசவேலை செய்ய 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருப்பதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பஸ் நிறுத்தம் போன்ற இடங் களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லாட்ஜூகளில் தங்கி இருப்பவர்களில் சந்தேகப்படும் வகையில் யாராவது இருக்கிறார்களா? என்று சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை புகுந்து பாலகோட் ராணுவ முகாமை தகர்த்து 200 பேரை கொன்றது, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஆகியவை பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பயங்கரவாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களில் ஏற்கனவே உச்சக்கட்ட பாதுகாப்பு இருப்பதால் பயங்கரவாதிகளின் பார்வை தென் மாநிலங்கள் மீது திரும்பியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் சமயத்தில் பயங்கரவாதிகள் 9 இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உதவியுடன்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. அதை திட்டமிட்டப்படி நடத்தியதால் இலங்கையில் உள்ள சிலிப்பர்-செல்கள் உதவியை பெற்று தென்இந்தியாவில் கைவரிசை காட்ட முடிவு செய்தனர்.
அதன்படி இலங்கையைச் சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 6 பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவினார்கள். இந்த வார தொடக்கத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் கைவரிசை காட்டக்கூடும் என்றும் நேற்று முன்தினம் உளவுத்துறை எச்சரித்தது.
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அப்துல்காதர் ரகீம் கொலியல் (40) பக்ரைனில் பணிபுரிந்து வந்தார். அவர்தான் இலங்கையில் இருந்து ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கும் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் வாலிபர் உதவியுடன் 6 பயங்கரவாதிகளும் தமிழ்நாட்டில் சில இடங்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
தற்போது அந்த 6 பயங்கரவாதிகளும் தமிழ்நாட்டில் ஒரே ஊரில்தான் பதுங்கி இருக்கிறார்களா? அல்லது வேறுவேறு ஊர்களுக்கு பிரிந்து சென்று விட்டார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே தான் தமிழ்நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென சமூக வலைத்தளங்களில் 3 பயங்கரவாதிகள் என்று படம் வெளியானது. இது பயங்கரவாதிகள் தேடுதல்வேட்டையில் தேவையற்ற குழப்பத்தையும், மக்கள் மத்தியில் பீதியையும் உருவாக்கியது. உண்மையில் 6 பயங்கரவாதிகளில் ஒரே ஒரு பயங்கரவாதி பற்றிய அடையாளம்தான் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த பயங்கரவாதியின் பெயர் இலியாஸ் அன்வர். இவன் கடந்த 21-ந்தேதி அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் சுற்றி திரிந்ததை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். தற்போதும் அவன் கோவையில்தான் பதுங்கி இருப்பான் என்று உளவுத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
மற்ற 5 பயங்கரவாதிகளும் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களைப் பற்றிய கூடுதல் விபரங்கள் தெரியவில்லை. இலங்கையைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உடலமைப்பு, முகச்சாயலில் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதால் மிக, மிக எளிதாக குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காக இலங்கையைச் சேர்ந்த 5 பேரை லஷ்கர்-இ-தொய்பா தேர்வு செய்து அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த 5 பயங்கரவாதிகளும் தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்குள் ஊடுருவக் கூடும் என்று உளவுத்துறை தனது எச்சரிக்கை தகவலில் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருக்கும் 6 பயங்கரவாதிகளும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு குறி வைத்து இருப்பது உறுதியாகியுள்ளது.
பயங்கரவாதிகள் வந்த நாள், சென்ற ஊர்கள், பதுங்கி இருக்கும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் 5 இடங்களுக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருக்கலாம் என்று உளவுத் துறையினர் பட்டியல் தயாரித்துள்ளனர். அபாய வளையத்துக்குள் சிக்கி இருக்கும் அந்த 5 இடங்கள் விபரம் வருமாறு:-
1. நாகை அருகே உள்ள வேளாங்கண்ணி ஆலயம்.
2. நீலகிரி மாவட்டம் ஊட்டி, வெலிங்டனில் உள்ள ராணுவ சேவை பயிற்சி கல்லூரி.
3. கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளம்.
4. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் ஆலயம்.
5. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்று மத ரீதியிலான பகுதி.
இந்த 5 இலக்குகளில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையமும், சூலூர் விமானப் படை தளமும் மிக, மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. எனவே அந்த இரு ராணுவ நிலைகளுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவது கடினம்.
சபரிமலை அய்யப்பன் ஆலயத்தில் இப்போது சீசன் இல்லை. மேலும் ஆவணி மாத நடைதிறப்பு கடந்த 18-ந்தேதி தொடங்கி முடிந்து விட்டது. இனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஆலயம் திறக்கப்படும். அதன்பிறகு புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந்தேதி நடை திறப்பார்கள். எனவே சபரிமலை பகுதியில் பயங்கரவாதிகளால் உடனடி அச்சுறுத்தல் இல்லை.
ஆகையால் நாகை வேளாங்கண்ணி கிறிஸ்தவ தேவாலயத் திருவிழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா ஆகியவற்றை குறி வைத்து 6 பயங்கரவாதிகளும் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புப் படையினர் கருதுகிறார்கள். வேளாங்கண்ணி தேவாலயத் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த திருவிழா நாட்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்துக்களும் பாதயாத்திரையாக சென்று வேளாங்கண்ணியில் வழிபடுவது வழக்கமாகும். லட்சக்கணக்கில் திரளும் அந்த பக்தர்களை குறி வைத்து 6 பயங்கரவாதிகளும் கைவரிசை காட்ட முயற்சி செய்யக்கூடும்.
அதுபோல தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் அடுத்த வாரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். அதில் மக்கள் அதிகம் கூடும் ஆலயங்களில் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.
பஸ், ரெயில் நிலையங்கள், மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றில் கைவரிசை காட்டுவதை விட ஆலய விழாக்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினால், அதிக உயிரிழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்துடன் பயங்கரவாதிகள் வந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டு இருப்பதால் பயங்கரவாதிகள் வேறு பெரிய இந்து ஆலயங்களில் புகுந்து தாக்குதல் நடத்தி விட கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் போன்ற பழமையான ஆலயங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ், ரெயில் நிலையங்கள், மால்களில் சந்தேகப்படும்படி நடமாடுபவர்களை பற்றி உட னுக்குடன் அருகில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவிக்கும்படி பொது மக்களுக்கு போலீசார் வேண்டு கோள் விடுத்துள்ளனர். தங்கும் விடுதிகளில் இருந்து புறப்பட்டு செல்பவர்கள் மீது சந்தேகம் எழுந்தால் தகவல் சொல்லும்படி ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு சந்தேகப்படும் படியான நபர்களை போலீசார் தனியாக அழைத்து சென்று நீண்ட நேரம் விசாரித்தே அனுப்பினார்கள்.
மேற்கு மண்டலத்தில் சுமார் 7 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கோவை சரக டி.ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.
ராமநாதபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தெரிவித்தார். கடலோரப் பகுதி களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருவது அதிகரிக்கப்பட்டுள்ளது.