தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி – 11 எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்றனர்
தமிழக காங்கிரசில் தொடங்கி இருக்கும் உட்கட்சி பிரச்சினை உச்சகட்டம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் 2 வட்டார தலைவர்களை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் என் கவனத்துக்கே கொண்டு வராமல் நியமிக்கப்பட்டிருப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக நியாயம் கேட்பதற்காக நெல்லையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கடந்த 15-ந்தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அப்போது மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நான்கைந்து பேருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. நேற்று காலையில் கூடிய ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு தவிர்க்க முடியாத காரணங்களால் ஆஜராக முடியாது. 2 வாரம் கழித்து மற்றொரு தேதி வழங்கும்படி ரூபி மனோகரன் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஒழுங்கு நடவடிக்கை குழு ரூபி மனோகரனை தற்காலிகமாக கட்சி பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நடத்தாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று விமர்சனமும் எழுந்தது.
அகில இந்திய செயலாளரான முன்னாள் எம்.பி. விசுவநாதன் தமிழக காங்கிரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தார். மாநில பொருளாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அகில இந்திய தலைமைக்கு மட்டுமே இருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் இந்த அவசர முடிவு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். எனவே ரூபி மனோகரன் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்கு அவசர கடிதம் அனுப்பினார். இதையடுத்து ரூபி மனோகரன் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்துவதற்கு தடைவிதித்தும் தமிழக பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டார். இந்த அதிரடி திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த களேபரத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை குறி வைத்து தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள். முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்களை கூறி தலைவர் பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதேபோல் பிரச்சினை இருந்த ஆந்திர மாநில தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். எனவே அழகிரியும் விரைவில் மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது பதவிக்காலமும் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
அடிதடி, மோதல் பிரச்சினை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க டெல்லி மட்டத்தில் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான வேலைகளில் பலர் தீவிரம் காட்டி வருகிறார்கள். முன்னாள் மாநில தலைவர்களுடன் முன்னாள் எம்.பி. விசுவநாதன், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ஆகியோரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்த அதிரடிக்கு தயாராகி இருக்கிறார்கள். காங்கிரசுக்கு மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் 11 பேர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள். கடைசி நேரத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த குழுவில் விஜயதரணி எம்.எல்.ஏ. செல்லவில்லை.
எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் இன்று மாலையில் மல்லிகார்ஜூன கார்கேவையும், நாளை காலையில் கே.சி.வேணுகோபாலையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்கள். செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வின் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை பறிப்பது மற்றும் சமீபத்தில் கட்சி நிகழ்வுகள் பற்றி மேலிடத்தில் புகார் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நிகழும் இந்த அதிரடி திருப்பங்களால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.