X

தமிழக ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் – டாக்டர்.ராமதாஸ் வரவேற்பு

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது?. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதைபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில், என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குழுவினர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பல நூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’ என்று ஐ.நா. அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: south news