X

தமிழக உள்ளாட்சி தேர்தல் – வேட்பு மனு பரிசீலனை இன்று நடக்கிறது

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகள் நிரப்பப்பட உள்ளது.

இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி இடங்கள் உள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த மாவட்டங்களில் கடந்த 9-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

இதில் கடந்த 14-ந்தேதி வரை மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 வேட்பு மனுக்கள் தாக்கல் ஆகி இருந்தது.

இறுதி கட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதால் கடைசி நாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால் மனுதாக்கல் செய்யும் இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இந்த தேர்தலில் 3 லட்சம் பேர் வரை மனுதாக்கல் செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்கள் பரிசீலனையை முறையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வேட்புமனு பரிசீலனையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த பரிசீலனையின்போது தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு ஆட்சேபத்துக்குரிய, முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கு அன்றைய தினமே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பெறுவதற்கு கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: south news