Tamilசெய்திகள்

தமிழக ஆளுநரை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்தார்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று மாலை திடீரென வந்தார். அவருடன் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா, சட்டசபை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் வந்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதையடுத்து, சில நிமிடங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேசிவிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் ஆளுநரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

கடலூர் முந்திரி ஆலையில் தொழிலாளி படுகொலை விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் சிக்காதிருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவர் சரணடைந்திருக்கும் நிலையில் இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறுகிறதா என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும்.

நெல்லை மாவட்டம் கீழச்செவல் நயினார்குளம் பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தி.மு.க. ஆட்சியில் அரங்கேறுகின்றன. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கையாள தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். நெல்லையில் பா.ஜ.க. நிர்வாகிகளை தாக்கிய ஞான திரவியம் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன.

தமிழக ஆளுநருடனான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தேன். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் வன்முறை மற்றும் ஆணவ கொலைகளைக் கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும், தி.மு.க. எம்.பி.க்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம் என பதிவிட்டுள்ளார்.