தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை – பயணிகள் அவதி
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதன்படி இன்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. புதுவையை பொறுத்தவரை நகரம், கிராமப்பகுதிகளுக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு அதிகளவில் தமிழக அரசு பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. இதில் புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.
சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, கும்பகோணம், காரைக்கால், கடலூர் பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் புதுவை பஸ்நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். புதுவை உப்பளம் அம்பேத்கார் சாலையில் உள்ள அரசு பணிமனையில் 54 பஸ்களும், மறைமலை அடிகள் சாலையில் உள்ள பணி மனையில் இருந்து 22 பஸ்களும் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பகுதியிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது. உப்பளத்தில் உள்ள தமிழக அரசு போக்கு வரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.