X

தமிழக அரசு தான் எங்களுக்கு கடவுள்! – நடிகர் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

பதில்:- இசை அமைப்பாளர் இளையராஜா பாராட்டு விழாவுக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்புக்கு நன்றி தெரிவித்தோம். வரிவிலக்கு விவகாரத்தில் மற்ற மொழி படங்களைவிட தமிழ் மொழி படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இனி நடைபெறும் திரைத்துறை தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் அரசு ஆதரவு கேட்டு இருக்கிறோம்.

கே:- தயாரிப்பாளர் சங்கத்தில் பார்த்திபன் விலகல் விவகாரம் குறித்து?

ப:- பார்த்திபன் சாரின் பெயர் சினிமா தாண்டி வரலாற்றில் பதிவான ஒரு வி‌ஷயம். அவர் செய்த முயற்சி இனி யாரும் செய்ய முடியாத சாதனை. பார்த்திபன் என்ற தனி மனிதனின் முயற்சியால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜா பாடும் நிகழ்வு நடந்தது. அம்பானி வீட்டு திருமணத்தில் கூட இப்படி ஒரு நிகழ்வை பார்க்க முடியாது. வரலாறு காணாத சாதனை. அவரது முயற்சி எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. எல்லா பெருமையும் அவரையே சாரும்.

கே:- இளையராஜா விழாவில் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ளவில்லையே?

ப:- எல்லோருக்கும் அழைப்பு விடுத்தோம். இது இளையராஜாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி. வருவதும் வராமல் இருப்பதும் அவர் அவர்கள் விருப்பம். இது பள்ளி நிகழ்ச்சி கிடையாது. கட்டாயப்படுத்தி ஒவ்வொருவராக வரவழைக்க.

கே:- நடிகர் சங்க கட்டட பணிகள் எப்போது முடியும்?

ப:- கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. நிகழ்ச்சி அரங்க வேலைகள் மட்டும்தான் பாக்கி. வரும் ஜூலை மாத முதல் வாரத்தில் திறப்பு விழா நடக்கும்.

கே:- கடந்த வாரம் வெளியான படங்கள்கூட பைரசி இணையதளங்களில் வெளியாகிவிட்டதே?

ப:- பைரசி வி‌ஷயத்தில் நான் நம்புவது கடவுளை அல்ல. கடவுளாக நினைக்கும் தமிழக அரசை. அவர்கள் நினைத்தால் ஆபாச இணையதளங்களை தடை செய்ததுபோல ஒரே உத்தரவில் தடை செய்ய முடியும். ஒரே நாளில் பைரசியை ஒழிக்க முடியும். அரசு பேருந்துகளில் புது படங்கள் ஒளிபரப்பட்டுவது பற்றியும் அரசிடம் கூறி உள்ளோம். நாங்கள் எங்கள் முயற்சிகளை தொடர்வோம்.

கே:- இளையராஜா நிகழ்ச்சி சங்கத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

ப:- கண்டிப்பாக உதவியாக இருக்கும். உலகம் முழுக்க உள்ளவர்கள் வந்து ரசித்துள்ளனர். டிவி மூலமும் பார்க்க போகிறார்கள். இது அவருக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமை. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த அந்த மாமேதைக்கு கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரத்தால் அவருக்கும் மகிழ்ச்சிதான்.

கே:- எவ்வளவு சங்கத்துக்கு நிதி கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

ப:- முறையான கணக்குகள் வந்த பிறகு வரவு செலவு அனைத்தையும் இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கே வெளியிடுவோம்.

கே:- பைரசியை ஒழிக்கவில்லை என்று வசந்த பாலன் உங்களை விமர்சித்துள்ளாரே?

ப:- அது அவருடைய கருத்து. நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து வருகிறோம். நான் ஒரு திருடனை பிடித்துவிட்டேன், ஆனால் விஷாலால் முடியவில்லை என்று சொன்னால் பெருமைப்படலாம். ஆனால் ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. களத்துக்கு வந்து எங்களுடன் நின்று போராடுங்கள். அனைவரையும் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.