Tamilசெய்திகள்

தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது – அமைச்சர் துரை முருகன் தகவல்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து துரைமுருகன் கூறியதாவது:-

மேகதாது விவகாரத்தில் கர்நாடகா எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அதேபோல் நமது நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கீழே இருக்கிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் ஓடி வந்தால் மேலே இருக்கிறவர்களுக்கு சொந்தமில்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆகவே, எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது. கர்நாடக அரசுக்கும் அது தெரியும். சுப்ரீம் கோர்ட் சொன்னால் என்ன, நாங்கள் செய்வோம் என்றால் எப்படி? உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது, அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

இவையெல்லாம் பெரிய அரசியல் கேள்வியாக எழுப்பக்கூடிய விவகாரமாக உள்ளது. அவ்வளவு சுலபமாக மத்திய அரசு சாய்ந்துவிடாது என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.