Tamilசெய்திகள்

தமிழக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி – திமுக பிரமுகரின் பதிவு

தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க படைப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி.

பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். 1944-ம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களை உருவாக்கி, திராவிடர் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் பெரியார்.

அண்ணா பெரும் சிந்தனையாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949-ல் தோற்றுவித்தவராக, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவராக அரசியலில் தனித்தன்மையோடு இயங்கி 1969-ல் மறைந்தார். 1969-ல் அண்ணா மறைந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்கும் பெரும் சுமை கருணாநிதிக்கு 45 வயதிலேயே ஏற்பட்டது. ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து சாதனையிலும் உலக நாடுகளின் தலைவர்களை கருணாநிதி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

62 ஆண்டுகள் சட்டமன்றப்பணி, 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதல்-அமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கருணாநிதியின் சாதனைகள் பல.

1969-ல் மத்திய-மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.

பண்பாட்டுத்துறையில் கருணாநிதி படைத்த சாதனைகள் ஓர் அரும்பெரும் செயலாகும். 133 அடி உயரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை அமைத்த சாதனை காலத்தை வென்று நிற்கும்.

1330 குறளுக்கும் மிக எளிய முறையில் உரை எழுதி, திறக்குறள் உரையாசிரியர்களில் இவரும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 5-வது முறை பணியாற்றி சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும், திட்டங்களையும் தீட்டிய கலைஞர், இந்திய அரசியல் வானில் மங்காமல் உலா வரும் ஒரு ஒளிச்சுடர் என பாபநாசம் கிளை இந்திய செஞ்சிலுவை சங்க புரவலரும், ஆயுட்கால உறுப்பினரும், தி.மு.க. பிரமுகருமான த.நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக பிரபல பத்திரிகை பதிவிட்டுள்ளது.