பரபரப்பானஅரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந் தேதி கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்பிக்க உள்ள நிலையில், புதிய சட்ட மசோதா சீர்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. மேலும் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் இப்போது மீண்டும் அமைச்சரவை கூட்டம் 27-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.