Tamilசெய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நான்கு நாட்கள் உற்சாகமாக நடைபெறும். இந்த ஆண்டின் பொங்கல் விழா நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையின் துவக்கமான போகிப் பண்டிகை நேற்று (மார்கழி கடைசி நாள்) கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சான்றோர் வாக்கின்படி, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தினர். மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் போகி கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

பொங்கலையொட்டி வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாடை உடுத்தி‌, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர்.

இதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றன. பொது வெளியில் மக்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழாக்கள், சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.