தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட் டும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருந்தது.
அதே நேரத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.
இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேவையின்றி பலர் வாகனங்களில் வெளியில் சுற்ற தொடங்கினார்கள்.
கடந்த 3 நாட்களாக இது போன்று மக்கள் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து ஊரடங்கை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சென்னையில் நேற்று முதல் போலீஸ் நடவடிக்கையை தாங்களாகவே தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அரசின் அறிவுரைகளை பொதுமக்களில் சிலர் ஒழுங்காக பின்பற்றாததால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்ற இன்று மட்டும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னையில் சுமார் 200 இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு, அண்ணாசாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிற்பகலில் போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் கடற்கரை பகுதியில் டிரோன் கேமரா மூலமும் போலீசார் கண்காணித்தனர். காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகளை சரியாக 12 மணிக்கு மூடி விட வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதனை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இதே போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் நடவடிக்கை இன்று தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
நெல்லையில் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்தனர். பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வாகன சோதனை செய்தனர்.
தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
மதுரையில் மாநகராட்சி, சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து 30 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது ஊரடங்கை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சுற்றியவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான சாலைகளில் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவையில் இன்று 2,500 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அதிக கெடுபிடி இல்லாத நிலையிலும் 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இன்றும் போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு இன்று மாலை முதல் பனியன் நிறுவனங்களும் மூடப்படுகின்றன.
இதையடுத்து பொதுமக்கள் இன்று தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை மீறி வெளியில் சுற்றியவர்கள் போலீஸ் பிடியில் சிக்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்துரோடு ரவுண்டானா, பெங்களூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
தமிழகத்தைப் போன்று புதுவையிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 நாட்களில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்றும் முழு ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த மாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.