Tamilசெய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 1 தேர்வுகள் தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,278 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகள், 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுத உள்ளனர். இதற்காக 2,914 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் 410 பள்ளிகளில் இருந்து 156 மையங்களில் 47,305மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். அதேபோல், புதுச்சேரி யில் 149 பள்ளிகளைச் சேர்ந்த 14,985 மாணவ-மாணவிகள் 40 மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.

வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளைச் சேர்ந்த சிறைவாசிகள் 78 பேர் புழல் மையத்தில் தேர்வெழுதுகிறார்கள்.

டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் 2,700 பேர் பிளஸ் 1 தேர்வை எழுத உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சொல்வதை கேட்டு எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொழிப்பாடங்கள் விலக்கு, தேர்வுக்கு கூடுதலாக 50 நிமிடங்கள் உள்ளிட்ட சலுகைகளும், தரைத்தளத்தில் அறைகள் ஒதுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு பணியில் 45 ஆயிரத்து 300 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களில் பார்வையிட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பார்த்து எழுத முயற்சி செய்தல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *