தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் தொடரும் வருமான வரி சோதனை
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதித்யா ராம், அம்பாலால் உள்ளிட்ட 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 14-ந்தேதி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.
இன்று 4-வது நாளாக இந்த சோதனை நீடிக்கிறது. வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அய்யப்பன்தாங்கல், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நிறுவன அலுவலகங்களில் சோதனை நடந்தது. சென்னையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடைபெற்றது.
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அம்பாலால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடைபெற்றது. அம்பாலால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் மட்டும் கணக்கில் வராத 7½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் போதுமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 4-வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த 4 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.