Tamilசெய்திகள்

தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதேசிறப்பான ஆட்சிக்கு அடையாளமாகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அரசு துறை வாரியான முதலீட்டு மாநாடுகளை மேற்கொண்டு, அத்துறைகளின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் ரூ.2,250 கோடி முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

1. கோத்தாரி- பீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்- காலணி உற்பத்தி.

2. கோத்தாரி-பீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்- ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு.

3. கோத்தாரி எஸ்.இ.எம்.எஸ். குழுமம்- தோல் அல்லாத காலணி உற்பத்தி.

4. வேகன் குழுமம்-தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி.

5. வாக்கரூ இண்டர் நேஷனல் பிரைவேட் லிமிடெட்-தோல் அல்லாத காலணி உற்பத்தி.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், இந்தத் துறையால் நடத்தப்படக்கூடிய ஏழாவது முதலீட்டாளர் மாநாடு இது. சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, துபாய் என்று பல இடங்களில் இந்த மாநாடு நடைபெற்ற போதிலும் இத்தனை மாநாடுகள், இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த மாநிலத்திலும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும்-புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும்-தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவதற்கு, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்புகளை அளித்திடும் துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். ‘வளர்ச்சித் திட்டங்கள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இதை மனதில் வைத்து தான் தமிழக அரசினுடைய அனைத்துத் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன.

அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், பின் தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் தனி நபர் வருமானம் அதிகரிப்பதுடன், அந்தப் பகுதியின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியின் இலக்குகளை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் ஒன்றும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. எந்த முதலீட்டுச் சூழ்நிலைக்கும் அரசு தயாராக உள்ளது, அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்து வருகிறது என்பது இதன் மூலம் நிச்சயமாக தெளிவாகும்.

சிப்காட், சிட்கோ மற்றும் பொது தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில் கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தோல் அல்லாத காலணிகள் துறை மீது கவனம் செலுத்திடவும் நமது அரசு முனைந்து வருகிறது.

தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தோல் அல்லாத உற்பத்திப் பொருட்கள்தான் சந்தையில் 70 சதவீதத்துக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன. அதன் பொருட்டே, இன்று வெளியிடப்பட்டுள்ள கொள்கையில், தோல் அல்லாத காலணித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் மேக் இன் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற நமது லட்சியத்தை இத்திட்டம் நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.