Tamilசெய்திகள்

தமிழகத்தை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உலக எய்ட்ஸ் தின செய்தியில் கூறியிருப்பதாவது:-

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்”ஆகும்.

எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற உயரிய நோக்கில் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளைக்கு இந்த நிதியாண்டில் (2019- 2020) 5 கோடி ரூபாயினை கூடுதல் வைப்பு நிதியாக வழங்கியுள்ளது.

இதன்மூலம் கூடுதலாக 1000 குழந்தைகளுக்கு அந்நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.

எய்ட்ஸ் குறித்த மீம்ஸ் விழிப்புணர்வு போட்டிகளின் மூலமாகவும், நடமாடும் தகவல் கல்வி தொடர்பு விழிப்புணர்வு வாகனங்களின் மூலமாகவும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்று, எய்ட்ஸ் நோயை தடுக்க தன்னார்வ ரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என்றும், எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *