தமிழகத்தை இரண்டாக பிரிக்க மாட்டோம் – மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டி

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்து வருகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் 8 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், அவர்கள் மூலம் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்வது குறித்தும் விளக்குவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகளை கட்சி தலைமை நியமித்துள்ளது.

அந்த வகையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நெல்லை மாவட்டம் வந்தார்.

பாளை பெருமாள்புரத்தில் உள்ள மண்டபத்தில் நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட செயலாளர் வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் மதம், இனம் பாகுபாடு இல்லாமல் மத்திய அரசின் எல்லா திட்டங்களும், எல்லா மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு எந்தவிதமான ஊழலும் இல்லாமல் திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. எல்லா கிராமங்களிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 8 கோடி மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் வீட்டு வாசல்களுக்கு சென்றடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மதிப்புமிக்க இந்தியாவை உருவாக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

வனத்துறை, நீர்வளத்துறை ஒப்புதல் பெறுவது உள்பட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் நெடுஞ்சாலை பணிகள் கிடப்பில் உள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. முழுமையான ஆய்வுக்கு பிறகு சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது எப்போது என கேட்கிறீர்கள், அது மக்கள் கையில் தான் உள்ளது. அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினை உள்கட்சி பிரச்சினை. நாங்கள் யார் வீட்டு வாசலையும் எட்டி பார்க்க மாட்டோம். தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை. தமிழ்நாடு ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாநிலம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools