X

தமிழகத்தை ஆள நினைக்கும் சிலரது கனவு நிறைவேறாது – ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக அரசு தலைமை காஜி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா காட்டிய அந்த அன்பு வழியில், அறநெறியில்தான் இன்றைக்கு நாம் இப்தார் விருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறோம். சிறப்பு மிக்க இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் கடும் விரதம் இருந்து, பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை-எளியோரின் பசி துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்துகிற சிறப்பை இறைவன் வழங்கியிருக்கிறான்.

ஒருவர், தான் ஈட்டுகின்ற லாபத்திற்கு ஏற்ப ஏழை மக்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னது இஸ்லாம். ஜெயலலிதாவும் அதைத்தான் சொன்னார், அதைத்தான் செய்தார்.

இஸ்லாமிய சமூகம் மேம்பாடு காண ஏராளமான நன்மைகளைச் செய்த ஜெயலலிதா வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளைத்தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமியர்களை நேசிப்பதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நிகரே இல்லை.

பொய்யைக் கூட உண்மை என்று நம்பி விடுகின்ற வேதனையான விஷயம் சில நேரங்களில் நடந்து விடுகிறது. பாலைவனத்தில் கடும் வெயிலில், தாகத்தோடு நடப்பவர்களுக்கு தூரத்தில் தண்ணீர் இருப்பது போல தெரியும். அங்கே போனால் தண்ணீர் கிடைக்கும் தாகம் தீரும் என்று நம்பி போவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரியும். அங்கே நீர் இல்லை. அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது. வெறும் கானல் நீர் என்று.

என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர், அ.தி.மு.க. என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை, 9 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் என்றுமே ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் திண்ணமான எண்ணம்.

தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏமாற்றுகிறவர்கள் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு, ஆனால், ஏமாறுகிறவர்கள் எப்பொழுதுமே ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் வழியில் சிறுபான்மையின மக்களின் தோழர்களாய் உங்களுடனே இருப்போம். உங்களுக்குத் தோள் கொடுப்போம். உங்களில் ஒருவராகவே வாழ்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் பொன்னையன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ஜ.க. மாநில சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆசீம் பாட்ஷா, புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் ஏ.அபுபக்கர், ஆற்காடு இளவரசர் முகமது அலி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் தனியரசு, மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் ந.சேதுராமன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய தேசிய லீக் தலைவர் ஜவகர்அலி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

வக்பு வாரியத் தலைவர் அன்வர் ராஜா நன்றி கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags: south news