தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.
இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 11-வது நாளாக நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.