Tamilசெய்திகள்

தமிழகத்துக்கு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்?

தமிழ்நாட்டில் நகர் பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப் பகுதிகளில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்றும் 5 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சிகள் இருக்கின்றன. அதுபோல கிராமப் பகுதிகளில் 12,524 ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றிய அமைப்புகளும் இருக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்தி முடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார். 2016 நவம்பர் மாதம் தேர்தல் நடத்தும் வகையில் அதிரடியாக தேர்தல் அட்டவணையையும் வெளியிட செய்தார்.

இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. எஸ்.டி., பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு செய்யவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்று உள்ளாட்சி தேர்தலை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

தமிழக தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதம் நீடித்தபடி உள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சிப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழ்நாட்டில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளை திருத்தம் செய்யும் பணி நடந்ததால் தேர்தல் நடத்தப்படுவது தள்ளிக்கொண்டே போனது.

இதற்கிடையே தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் உள்ளாட்சி நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தனி அதிகாரிகள் மூலம் உள்ளாட்சி நிர்வாகம் நடத்தப்பட்டாலும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. மேலும் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்தலை நடத்தி முடிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே அக்டோபர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் மின்னணு எந்திரங்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய கணக்கெடுப்புப்படி தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதுபோல பாராளுமன்ற தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஏற்பாடுகளைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி இந்த தடவை தேர்தல் நடந்தால்தான் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை பெற முடியும். இந்த நிதியை உடனே ஒதுக்கக் கோரிதான் நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அமைச்சர் வேலுமணி சந்தித்து மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *