தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு – இன்று பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்
காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.
தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளன.
ஓலோ, ஊபர் டாக்சி சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் கூறியுள்ளன. முழு அடைப்பையொட்டி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடக்கிறது. பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். பாதுகாப்புக்காக 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.