தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை – முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இதனை சரி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது. ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக மாநில அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது ஆலோசனைக்கூட்டம் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14-ந் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தி தமிழகம், கர்நாடகா முன் வைக்கும் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா செயல்படுத்தியதா? என்பது குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் விளக்கம் தேவை எனவும் அணைகளில் தற்போதைய நீர் இருப்பு விவரம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதனிடையே, ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள 2 வாரங்களுக்கான நீர் பங்கீடு தொடர்பான, ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கர்நாடக அணைகளில் இருந்து, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வரை, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடும்படி பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி ஒழுங்காற்று ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கூறியுள்ளது. கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன் பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 295 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 1,891 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 101.82 அடியாக உள்ளது. அதுபோல் கபினி அணைக்கு 1,630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 73.77 அடியாக உள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இன்று நடைபெறுவது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.