ஷவர்மா சாப்பிட்டதால் கேரளாவில் மாணவி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன், புதுக்கோட்டையை சேர்ந்த பரிமளேஸ்வரன், தருமபுரியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார்கள்.
அங்கு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். வாந்தியும் எடுத்தனர். உடனடி யாக அவர்கள் 3 பேரும் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சென்னையில் தரமற்ற பொருட்கள் என்று சந்தேகிக்கப்பட்ட கடைகளில் இருந்து உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருக்குவளையில் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்பட பல பகுதியில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
இதுவரை 60 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடைகளில் இருந்து தரமற்ற 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அதிகாரிகள் அந்த கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் என்று அபராதம் விதித்தனர்.
இதேபோல் நாசப்பட்டி வைத்திப் வண்டிப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்தார்கள்.