Tamilசெய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 29-ந்தேதி (இன்று) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ந்தேதி (நாளை), 31-ந்தேதி (நாளை மறுநாள்) மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதிகளில் வெப்பசலனம் காரணமாக உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘குடிதாங்கி 9 செ.மீ., மாமல்லபுரம்8 செ.மீ., கடலூர் கலெக்டர் அலுவலகம் 7 செ.மீ., இளையான்குடி, திருக்கழுக்குன்றம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரியில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.