Tamilசெய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. காங்கிரசை சரிவில் இருந்து மீட்கவும், பலப்படுத்தவும் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த ராஜஸ்தான் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராகுல்காந்தி 148 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. ராகுலுடன் 300 முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பாத யாத்திரையில் பங்கெடுப்பார்கள். அவர்கள் மாவட்ட எல்லை வரை உடன் செல்வார்கள். அங்கிருந்து அடுத்த மாவட்ட தொண்டர்கள் வரவேற்று யாத்திரையில் பங்கெடுப்பார்கள். இப்படியே இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடைபெறுகிறது.

நாள் ஒன்றுக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. ராகுலின் பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பாதயாத்திரை புறப்படுகிறார். அங்கிருந்து நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்து தமிழக எல்லையான களியக்காவிளை வரை 70 கி.மீ. தூரம் உள்ளது. எனவே 2 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை செல்கிறார். 3-வது நாள் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்கிறார். கேரள மாநில சுற்றுப்பயணத்தின்போது அவரது தொகுதியான வயநாட்டிலும் யாத்திரை செல்லும் வகையில் பயணப்பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளனர். ராகுல் பாதயாத்திரையை எழுச்சியுடன் நடத்த மாநில அளவில் விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.