Tamilசெய்திகள்

தமிழகத்தில் 23 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு – ஆய்வில் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 2-வது அலையில் தமிழகத்தில் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானோரில் பெரும்பாலானவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாத நிலை உள்ளது.

எனவே பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டது.

பொது சுகாதாரத்துறையினர் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தின் 765 இடங்களில் பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். மொத்தம் 22 ஆயிரத்து 904 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

அவை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுசுகாதாரத்துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. அப்போது 5316 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் உடலில் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 23 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளது.

அதிகபட்சமாக திருவள்ளூரில் 49 சதவீதம் பேருக்கும், செங்கல்பட்டில் 43 சதவீதம் பேருக்கும் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. குறைந்த பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புதிறன் உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இதே போன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 31 சதவீதம் பேருக்கு எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டது. எதிர்ப்பாற்றல் தற்போது குறைந்துள்ளதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடுவதற்கு முன்பே ஆய்வு நடத்தப்பட்டதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் உருமாறி வீரியம் அடைந்து இருப்பதும் எதிர்ப்பாற்றல் உருவாகாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

பெருந்தொற்று பரவல் இருக்கும்போது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி விரிவாக்கம், செயல் திட்டங்கள் போன்றவை வகுக்கப்படும். அடுத்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் இதுபோன்ற ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.