X

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியது முதல் இன்று வரை தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட மாநிலங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தை காற்று ஈர்த்துச் சென்றதால் நேற்று பல பகுதிகளில் வெயில் அடித்தது.

ஆனாலும் நேற்றிரவு சென்னை உள்பட பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகர்ந்து செல்கிறது.

இதேபோல் அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால் தமிழகத்துக்கு 2 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும். மீனவர்கள் ஆந்திரா மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது தூறல் விழும். ஒருசில நேரங்களில் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 2.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 0.6 மி.மீ மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலையிலும் தூறல் விழுந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழை 2 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Tags: south news