தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 24, 25-ந்தேதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 18-ந்தேதி ஒரே நாளில் திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பதிவாகியது. இதேபோல், தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகே வந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டது. இந்த மேலடுக்கு சுழற்சியால் தான் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.
சென்னையில் இன்று ஆங்காங்கே இடியுடன் பலத்த மழை பெய்தது. பாரிமுனை, பெசன்ட்நகர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, அயனாவரம், சூளைமேடு, அம்பத்தூர், கொடுங்கையூர், மூலக்கடை, வண்ணாரப்பேட்டை உள்பட பல இடங்களில் மழை பெய்தது.
தற்போது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-
சென்னைக்கு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் சில இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் உருவாகி, சென்னைக்கு கீழே நாளை (23-ந்தேதி) இரவு வருகிறது. இதனால் வருகிற 24, 25-ந்தேதிகளில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.